அமெரிக்காவுக்கு ரஷ்யா கடும் கண்டனம்

ரஷியா-உக்ரைன் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த படியே இருக்கிறது. இரு நாடுகளும் தங்களது எல்லையில் படைகளை குவித்துள்ளன. அமெரிக்க தலைமையிலான நேட்டோ படையில் உக்ரைன் சேர்வதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த முடிவை திரும்பப்பெற வேண்டும் என்ற ரஷியாவின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்ததால் பதற்றம் நீடித்து வருகிறது. மேலும் உக்ரைனை தாக்கினால் ரஷியா கடும் விளைவுகளை சந்திக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ரஷியாவை போர் சூழலுக்கு தள்ள அமெரிக்கா முயற்சிக்கிறது என்று ரஷிய அதிபர் புதின் குற்றம் சாட்டி உள்ளார். இந்த நிலையில் கிழக்கு ஐரோப்பியாவில் நேட்டோ படைகளுக்கு உதவ 3 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்புவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதையடுத்து ஜெர்மனியில் இருந்து 1000 அமெரிக்க வீரர்கள் ரூமேனியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதேபோல் அமெரிக்காவில் இருந்து 2000 ஆயிரம் வீரர்கள் ஜெர்மனி, போலந்துக்கு புறப்பட்டுள்ளனர்.

கிழக்கு ஐரோப்பியாவுக்கு படைகள் அனுப்பப்படும் அறிவிப்பை வெளியிட்ட பிறகு அதிபர் ஜோபைடன் கூறும்போது, ‘ரஷிய அதிபர் புதின் ஆக்ரோ‌ஷமாக செயல்படும் வரை கிழக்கு ஐரோப்பியாவில் எங்களின் நேட்டோ நட்பு நாடுகளுக்கு நாங்கள் அங்கு இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்துவோம்’ என்று தெரிவித்தார்.

கிழக்கு ஐரோப்பியாவுக்கு படைகளை அனுப்பியதால் அமெரிக்காவுக்கு ரஷியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷிய துணை வெளியுறவு மந்திரி அலெக்சாண்டர் க்ருஷ்கோ கூறும்போது ‘அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இரு தரப்புக்கும் இடையே சமரசத்தை கடினமாக்கும். ராணுவ பதற்றத்தை அதிகரிக்கும் இந்த செயல் அழிவுக்கான நடவடிக்கை அரசியல் ரீதியான முடிவுகளுக்கான வாய்ப்புகளை இது குறைக்கும்’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools