அமெரிக்கா, எகிப்து சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 20 முதல் 25-ந் தேதி வரை அமெரிக்காவிலும், எகிப்திலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். பிரதமரின் அமெரிக்கப் பயணம் நியூயார்க்கில் தொடங்கும். அங்கு ஐ.நா. தலைமையகத்தில் 21-ந் தேதி நடைபெற உள்ள சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களுக்கு அவர் தலைமை வகிப்பார்.

நியூயார்க்கில் இருந்து பிரதமர் வாஷிங்டன் செல்ல உள்ளார். அங்கு வெள்ளை மாளிகையில் அவருக்கு 22-ந் தேதி பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதை தொடர்ந்து அவர் அமெரிக்கா அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார். அன்று மாலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அவரது மனைவி ஜில் பைடனும் பிரதமரை கவுரவிக்கும் வகையில் விருந்தளிப்பார்கள்.

அமெரிக்க பாராளுமன்ற அவைகளில் கூட்டுக்கூட்டத்தில் பிரதமர் மோடி 22-ந் தேதி உரை நிகழ்த்துவார். பாராளுமன்ற கீழவை தலைவர் கெவின் மெக் கார்த்தி, மேலவை தலைவர் சார்லஸ் ஷூமர் உள்ளிட்டோரின் அழைப்பை ஏற்று அவர் உரை நிகழ்த்த உள்ளார்.

பிரதமருக்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீசும், அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கனும் 23-ந் தேதி மதிய விருந்தளிப்பார்கள். அதிகாரப்பூர்வ அலுவல்கள் தவிர முக்கிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், தொழில் நிபுணர்கள் உள்ளிட்டோருடன் மோடி கலந்துரையாட உள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களையும் அவர் சந்திக்க உள்ளார். அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு 24, 25-ந் தேதிகளில பிரதமர் எகிப்துக்கு பயணம் மேற்கொள்கிறார். அந்நாட்டு அதிபர் அப்தெல் பட்டா எல்-சிசியின் அழைப்பை ஏற்று பிரதமர் இந்த பயணத்தை மேற்கொள்கிறார்.

எகிப்து அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துவது தவிர எகிப்து அரசின் முக்கிய தலைவர்கள், அந்நாட்டின் பிரபலங்கள், எகிப்து வாழ் இந்தியர்கள் ஆகியோருடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார். பின்னர் நாடு திரும்புகிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news