X

அரசு பேருந்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.3.47 கோடி!

தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுடன் காலியாக இருக்கும் அரூர் உள்ளிட்ட 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனையில் இதுவரையில் கணக்கில் காட்டப்படாத ஏராளமான பணம் மற்றும் பொருட்கள் சிக்கி உள்ளன.

இந்த நிலையில், தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே நரிப்பள்ளியை அடுத்த பையர்நாயக்கன்பட்டி கூட்ரோட்டில் நேற்று மாலை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருவண்ணாமலையில் இருந்து அரூர் நோக்கி சென்ற அரசு பேருந்தை சோதனை செய்ததில், பேருந்தின் இருக்கைகளுக்கு அடியில் 7 பைகளில் கேட்பாரற்று கிடந்த ரூ.3 கோடியே 47 லட்சத்து 51 ஆயிரத்து 110 பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர்.

அரூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால், அங்கு வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் அரசு பஸ்சில் சுமார் ரூ.3½ கோடி சிக்கிய சம்பவம் அரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: south news