அ.தி.மு.க., பா.ஜ.கவின் பி டீமாக செயல்படுகிறது – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி

கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

பா.ஜ.க., அ.தி.மு.க கட்சிகளை வீழ்த்துவதற்காக தி.மு.க. கூட்டணியில் உள்ளோம். அ.தி.மு.க., பா.ஜ.கவின் பி டீமாக செயல்படுகிறது. இந்த பாராளுமன்ற தேர்தலில் கடந்த அளவு கிடைத்த வெற்றி கூட இந்த முறை அ.தி.மு.க.வால் பெற முடியாது.

சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பது போல எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். முத்தலாக், சிஏஏ, காஷ்மீர் பிரிவினை போன்றவை கொண்டு வரப்பட்டபோது எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்து விட்டு, தற்போது சிறுபான்மை மக்களின் காவலன் என அ.தி.மு.க. ஏமாற்ற பார்க்கின்றது.

அதனை எடப்பாடி பழனிசாமி வேண்டுமென்றால் மறந்திருக்கலாம். சிறுபான்மை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். பா.ஜ.க, அ.தி.மு.க எவ்வளவு பிரசாரம் செய்தாலும் எடுபடாது. கோவை, மதுரை ஆகிய இரு தொகுதிகளில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்றோம். அதேபோன்று வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் இந்த 2 தொகுதிகளையும் வலியுறுத்தி கேட்டு பெறுவோம். மதுரை, கோவை பாராளுமன்ற தொகுதிகளை கண்டிப்பாக கேட்போம்.

எல்லா கட்சிகளையும் போல கூடுதலான தொகுதிகளில் போட்டியிட விருப்பம் உள்ளது. கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் கூடுதல் தொகுதிகள் கேட்போம். தொகுதி பங்கீட்டில் பிரச்சனை ஏற்படும் என நினைக்கின்றனர். ஆனால் தொகுதி உடன்பாடு சுமூகமாக நடைபெறும். உண்மைக்கு மாறான விஷயங்களை மோடி தொடங்கி அண்ணாமலை வரை பேசுகின்றனர். அண்ணாமலை மூளைக்கு எதுவும் தெரியாது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் காவிரி டெல்டா பகுதி என்பது பற்றி ஞானமே இல்லை.

அண்ணாமலை ஞானசூனியமாக இருக்கின்றார். தமிழக வளர்ச்சிக்கு யார் அதிகம் இருந்திருக்கின்றனர், கம்யூனிஸ்டுகளா, பா.ஜ.க.வா என பகிரங்கமாக விவாதிக்க தயார். தமிழக அரசு மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும். தமிழகத்தில் உள்ள தொழில்கள் வேறு பல மாநிலங்களுக்கு இடம் மாறும் நிலை இருக்கிறது.

சிறுகுறு தொழில்முனைவோரிடம் பேச்சு நடத்தி தொழில் கடன்கள் வழங்கி அவர்கள் தொழில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் மீது குண்டர் சட்டம் போடக்கூடாது என்பதை உடனே வலியுறுத்தினோம். தி.மு.க. கொடுத்து இருக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

போக்குவரத்து ஊழியர் சம்பள விவகாரம், பழைய ஓய்வூதியம் போன்றவை நிறைவேற்றப்பட வேண்டும். தொழில் துறையினருக்கு மின்கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news