ஆசிய பெண்கள் 5 பேர் ஹாக்கி – தாய்லாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது

அடுத்த ஆண்டு நடைபெறும் முதலாவது 5 பேர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி சுற்றான ஆசிய மண்டல பெண்கள் போட்டி ஓமன் நாட்டின் சலாலா நகரில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த அரை இறுதியில் இந்திய அணி 9-5 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்திய அணி அடுத்த ஆண்டு ஜனவரியில் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் நேற்று இரவு நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் மோதின. இறுதி போட்டியிலும் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தியது. இந்திய வீராங்கனைகள் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர். முடிவில் இந்திய அணி 7-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்திய அணி தரப்பில் குஜூர் மரியானா மற்றும் ஜோதி 2 கோல்களும், டோப்போ திபி மோனிகா, கவுர் நவ்ஜோத் மற்றும் சவுத்ரி மஹிமா தலா ஒரு கோலும் அடித்தனர். இந்த தொடர் முழுவதும் தோல்வியே சந்திக்காமல் இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற இந்திய அணியினருக்கு ஹாக்கி இந்தியா ரொக்க பரிசு அறிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு வீராங்கனைக்கும் ரூ. 2 லட்சமும் மற்ற பணியாளர்களுக்கு ரூ. 1 லட்சமும் ரொக்க பரிசு அறிவித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports