X

ஆந்திராவில் இரவு வரை நீடித்த வாக்குப் பதிவு

17-வது மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆந்திராவில் மக்களவை தேர்தலோடு அம்மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு தொடங்கியபோது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பல்வேறு பூத்களில் செயல்படவில்லை. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த வாக்காளர்கள் திரும்பி சென்றுவிட்டனர். அதேசமயம், ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்றன.

இயந்திரக்கோளாறு, மோதல் ஆகியவற்றால் சுமார் 400 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தாமதம் ஆனது. 6 மணிக்குள் வாக்களிக்க வந்து காத்திருந்த அனைத்து வாக்காளர்களையும் ஓட்டுப்பதிவு செய்ய அதிகாரிகள் அனுமதித்தனர். குந்துர், கிருஷ்ணா, நெல்லூர், கர்னூல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனால் வாக்குப்பதிவு அதிகரித்தது.

மாலை 6 மணி நிலவரப்படி சராசரியாக 74 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. வன்முறை உள்ளிட்ட காரணங்களால் பல வாக்குச்சாவடிகளில் இரவு வரை வாக்குப்பதிவு நடைபெற்றதால், கிட்டத்தட்ட 80 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags: south news