ஆந்திர மாநில கூட்டணி குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை – திருப்பதியில் போட்டியிட பா.ஜ.க முடிவு

ஆந்திர மாநிலத்தில் பா.ஜனதா தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகள் கூட்டணியில் சிக்கல் நீடித்து வருகிறது. தொகுதி உடன்பாடு ஏற்படும் முன்னதாகவே சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் பட்டியலை தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சி வெளியிட்டுள்ளது.

இதனால் பா.ஜ.க. அதிர்ச்சி அடைந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் 10 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என பா.ஜ.க வலியுறுத்தி உள்ளது. ஆனால் சந்திரபாபு நாயுடு கூட்டணி கட்சிகளுக்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கூட்டணி குறித்து மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகளின் கருத்துக்களை ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார். டெல்லி மேலிட தலைவர்கள் ஆலோசனைக்கு பிறகு ஆந்திர மாநிலத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என அந்த மாநில தலைவர் புரந்தேஸ்வரி தெரிவித்தார்.

ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள திருப்பதி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே 1999-ம் ஆண்டு இந்த தொகுதியில் பா.ஜனதாவுக்கு ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். திருப்பதி தொகுதியில் பா. ஜனதா வேட்பாளராக மாநில செயலாளர் முனி சுப்பிரமணியம் அல்லது கர்நாடக மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் ரத்தன பிரபாவின் மகள் நிகாரிகா ஆகிய இருவரில் ஒருவர் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools