ஆப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ரஷித் கான் மீண்டும் நியமனம்

டி20 உலக கோப்பையில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி தொடர் தோல்விகளை தழுவி, தொடரை விட்டு வெளியேறியது. ஆப்கானிஸ்தான் அணி எதிர்பார்த்த அளவிற்கு ஆடவில்லை. டி20 உலக கோப்பை தோல்வி எதிரொலியாக அந்த அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார் முகமது நபி.

இதையடுத்து ஆப்கானிஸ்தான் டி20 அணியின் புதிய கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் அணியின் மிகச்சிறந்த ஸ்பின் ஆல்ரவுண்டரும் மேட்ச் வின்னருமான ரஷித் கான், சர்வதேச கிரிக்கெட்டில் 5 டெஸ்ட், 86 ஒருநாள் மற்றும் 74 டி20 போட்டிகளில் ஆடிய சிறந்த அனுபவம் கொண்டவர்.

பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்துவகையிலும் சிறப்பான பங்களிப்பை செய்து ஆப்கானிஸ்தான் அணியின் மேட்ச் வின்னராக ஜொலித்துவரும் ரஷித் கான், ஏற்கனவே 2019-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்திருக்கிறார். 2019-ல் 7 டி20, 7 ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்தியிருக்கிறார்.

ரஷித் கான் கேப்டன்சியில் ஆடிய 7 டி20 போட்டிகளில் 4 வெற்றிகளை ஆப்கானிஸ்தான் அணி பெற்றது. இந்நிலையில், இப்போது மீண்டும் ஆப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வெறும் 24 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த அனுபவத்தை பெற்றுள்ள ரஷித் கான் தான் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் எதிர்காலம். ஒரு சிறந்த ஆல்ரவுண்டர், அணியை முன்னின்று வழிநடத்த சரியான வீரர் ஆவார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools