ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். அப்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை(16-ந்தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி கோவில் நடையை திறக்கிறார். நாளை வேறு எந்த பூஜைகளும் நடைபெறாது. நாளை மறுநாள்(17-தேதி) முதல் வருகிற 21-ந்தேதி (திங்கட்கிழமை) வரை தினமும் கணபதி ஜோமம், உஷ பூஜை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும். அது மட்டுமின்றி படி பூஜை, உதயாஸ்தமய பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது.

மேலும் இந்த 5 நாட்களும் நெய் அபிஷேகமும் நடைபெறும். கோவில் நடை திறந்திருக்கும் 5 நாட்களும் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி ஆன்லைன் முன்பதிவு மையங்களும் நிறுவப்படுகின்றன.

நாளைமறுநாள் மலையாள வருடத்தின் முதல் நாளாகும். இதனால் அன்றைய தினம் சபரிமலையில் லட்சார்ச்சனை நடைபெறும். மாதாந்திர பூஜை முடிவடைந்து வருகிற 21-ந்தேி இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் திறக்கப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news