ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தி வார்த்தை அச்சிட முடியாது – தமிழக அமைச்சர் நாசர் அறிவிப்பு

தமிழ்நாட்டின் ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி தயிர் பாக்கெட்டுகளில், இந்தி வார்த்தையான ‘தஹி’ என அச்சிட வேண்டும் எனவும், தமிழில் ‘தயிர்’ கன்னடத்தில் ‘மோசரு’ போன்ற வார்த்தைகளை அடைப்பு குறிக்குள் பயன்படுத்தலாம் என மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டு ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.

இந்த அறிவுறுத்தல் தென்மாநிலங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சி என சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், ஆவின் தயிர் பாக்கெட்களில் ‘தஹி’ என அச்சிடப்படாது என பால்வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார். ‘ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் தஹி என இந்தியில் அச்சிடப்படாது. மத்திய அரசின் உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் உத்தரவை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை. இந்தியை மறைமுகமாக திணிக்கும் முயற்சி என்பதால் நடைமுறைப்படுத்த முடியாது’ என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools