ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் – ரோகித் சர்மா சதம் அடித்தார்

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் முதலில் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்தது. இறுதியில் ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது . இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா 5 விக்கெட் ,அஸ்வின் 3 விக்கெட் வீழ்த்தினார்.

அதையடுத்து முதல் இன்னிங்சில் இந்திய அணி விளையாடியது. முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில், கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா அரை சதம் கடந்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய கே.எல்.ராகுல் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டநேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் சேர்த்திருந்தது. ரோகித் 56 ரன்களுடனும், அஸ்வின் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இந்த நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

உணவு இடைவேளை முடிந்து வந்த இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 2-வது பந்தையே பவுண்டரிக்கு அனுப்பி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். ஆனால் நாதன் லயன் பந்து வீச்சில் அவர் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். ஒரு முனையில் நிதானமாக விளையாடி கொண்டிருந்த கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து இந்திய அணி விளையாடி வருகிறது. 65 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 102 ரன்னிலும் ஜடேஜா 11 ரன்னிலும் விளையாடி வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools