X

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி எங்களுக்கு சிறப்பாக அமையும் – ஷர்துல் தாக்கூர் பேட்டி

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது.

முதலில் ஆடிய இங்கிலாந்து அணி இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் திணறியது. அந்த அணி 65.4 ஓவர்களில் 183 ரன்னில் சுருண்டது. கேப்டன் ஜோ ரூட் அதிக பட்சமாக 64 ரன்னும், பேர் ஸ்டோவ் 29 ரன்னும் எடுத்தனர்.

பும்ரா 4 விக்கெட்டும், முகமது ‌ஷமி 3 விக்கெட்டும், ‌ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன் எடுத்து இருந்தது. ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் தலா 9 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

நேற்றைய போட்டி குறித்து இந்திய வேகப்பந்து வீரர் ‌ஷர்துல் தாகூர் கூறியதாவது:-

ஜோரூட் விக்கெட்டை கைப்பற்றியது முக்கியமானது. இதேபோல் பேர்ஸ்டோவும் நல்ல நிலையில் ஆடி வந்தார். அவர் சிறந்த நிலைக்கு சென்று விட்டால் அவுட் செய்வது கடினம். இதனால் அவரது விக்கெட்டும் முக்கியமானதாகும்.

ஆடுகளத்தை பார்த்தால் 4 வேகப்பந்து வீரர்கள் தேவைப்படமாட்டார்கள் என்று நினைத்தோம். இங்குள்ள தட்ப வெப்ப நிலைக்கு டியூக் பந்துகளை வீசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த டெஸ்ட் போட்டி எங்களுக்கு தொடர்ந்து சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.