இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆஷஷ் டெஸ்ட் போட்டி – ஆஸ்திரேலியா வெற்றி பெற 174 ரன்கள் தேவை

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் போட்டி இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

ஜோ ரூட் சதமடித்து 118 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 386 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. உஸ்மான் கவாஜா 141 ரன்னும், அலெக்ஸ் கேரி 66 ரன்னும், டிராவிஸ் ஹெட் 50 ரன்னும் எடுத்தனர்.

இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராடு, ஒல்லி ராபின்சன் தலா 3 விக்கெட்டும், மொயீன் அலி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 7 ரன்கள் முன்னிலையுடன் 2-ம் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி இன்று 4-ம் நாள் ஆட்டத்தின்போது சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் தலா 46 ரன்கள் சேர்த்து அவுட் ஆகினர். பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள், ஒல்லி ராபின்சன் 27 ரன்கள் எடுத்தனர். இறுதியில், இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 273 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா சார்பில் பேட் கம்மின்ஸ், நாதன் லயன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் ஜோடி நிதானமாக ஆடியது. அணியின் எண்ணிக்கை 61 ஆக இருக்கும்போது வார்னர் 36 ரன்னில் அவுட்டானார்.

அடுத்து இறங்கிய லாபுசேன் 13 ரன்னிலும், ஸ்டீவன் ஸ்மித் 6 ரன்னிலும் அவுட்டாகினர். இறுதியில், நான்காம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்துள்ளது. உஸ்மான் கவாஜா 34 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

கடைசி நாளான இன்று ஆஸ்திரேலியா வெற்றி பெற 174 ரன்கள் தேவை. இங்கிலாந்து வெற்றிபெற 7 விக்கெட் தேவை. எனவே இன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports