இணைய மோசடிகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் – அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், டெல்லியில் நடந்த தொழில்நுட்பம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:-

பொதுமக்கள், தொலைபேசி அழைப்பு அல்லது குறுஞ்செய்தி மூலமாக இணைய மோசடியில் சிக்குகிறார்கள். பணத்தை இழக்கிறார்கள். அதை தடுக்க பொதுத்துறை வங்கிகளை மத்திய அரசு அவ்வப்போது ஆய்வு செய்கிறது. ரிசர்வ் வங்கி, தனது அமைப்புகளை ஆய்வு செய்கிறது. காப்பீட்டு நிறுவனங்களும் தங்கள் கட்டமைப்பை ஆய்வு செய்கின்றன. தேவையான அனைத்தையும் நாங்கள் செய்து வருகிறோம். இணைய மோசடிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.

விழிப்புணர்வு ஏற்படுத்தாவிட்டாலோ, செல்போனில் வருவதை எல்லாம் நம்பி செயல்பட வேண்டாம் என்று உஷார்படுத்தாவிட்டாலோ பொதுமக்களுக்கு ஆபத்துதான் உருவாகும். மோசடியாளர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதிலும், துஷ்பிரயோகம் செய்வதிலும் நம்மை விட ஒருபடி முன்னால் உள்ளனர். எனவே, நாம் நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளது. இது ஒரு முடிவில்லாத விளையாட்டு.

தொழில்நுட்பம் என்பது ஒரு விலங்கு போன்றது. அதன் கடிவாளம் நமது கையில் இருக்க வேண்டும். பெரிய நிறுவனங்கள், இத்தகைய மோசடிகளை தடுக்க பயிற்சி பெற்ற குழுக்களை நியமிக்க வேண்டும். மோசடியாளர்கள், உங்களை பற்றிய சில தகவல்களை தெரிந்து வைத்துக்கொண்டு, உண்மையான நபர் என்று நீங்கள் நம்பும் வகையில் பேசி, பணம் அனுப்ப சொல்வார்கள்.

அவர்கள் சரியான நபர்கள்தான் என உறுதிப்படுத்திக்கொள்ளாமல் நம்ப வேண்டாம் என்று அரசு அமைப்புகளும், வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news