இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் – ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் தேர்வு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

நாக்பூர், டெல்லியில் நடந்த முதல் 2 போட்டிகளில் இந்தியாவும், இந்தூரில் நடந்த 3-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. அகமதாபாத்தில் நடந்த கடைசி டெஸ்ட் டிராவில் முடிந்தது.

டெல்லியில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டி முடிந்ததும், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தனது தாயார் மரியாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதை அறிந்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் சிட்னி விரைந்தார். இதனால் அவர் கடந்த 2 டெஸ்ட் போட்டிகளை தவறவிட்டார். இதற்கிடையே கம்மின்சின் தாயார் கடந்த வாரம் மரணம் அடைந்தார்.அவருக்கு பதிலாக ஸ்டீவன் ஸ்மித் கேப்டனாக செயல்பட்டார்.

இதற்கிடையே, இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி மும்பையில் வருகிற 17-ம் தேதியும், 2-வது ஆட்டம் விசாகப்பட்டினத்தில் 19-ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி சென்னையில் 22-ம் தேதியும் நடக்கிறது.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி கேப்டனாக ஸ்டீவன் சுமித் நீடிப்பார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஸ்டீவன் சுமித் ஏற்கனவே 51 ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி வருமாறு:

டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), மார்னஸ் லபுஸ்சேன், மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், ஜோஷ் இங்லிஸ், சீன் அப்போட், ஆஷ்டன் அகர், மிட்செல் ஸ்டார்க், நாதன் எலிஸ், ஆடம் ஜம்பா

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools