இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது!

நியூசிலாந்து – இந்தியா இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹேமில்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து, நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிம் செய்பெர்ட், காலின் முன்ரோ களமிறங்கினர். இருவரும் முதலில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அணியின் ரன் விகிதம் ஒரு ஓவருக்கு 10 ரன்களுக்கு குறையாமல் வந்தது.

அணியின் எண்ணிக்கை 80 ஆக இருக்கும்போது குல்தீப் யாதவ் இந்த ஜோடியை பிரித்தார். செய்பெர்ட் 25 பந்தில் 43 ரன் எடுத்து அவுட்டானார்.

அதிரடியாக ஆடிய முன்ரோ 40 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து குல்தீப் பந்தில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கேப்டன் வில்லியம்சன் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். கிராண்ட்ஹோம் 30 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. மிச்செல் 19 ரன்னுடனும், டெய்லர் 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இதனால் இந்தியாவிற்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், கலீல் அகமது, புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்கமே சோகமாக அமைந்தது. துவக்க வீரர் தவான் 5 ரன்கள் எடுத்து முதல் ஓவரிலேயே நடையை கட்டினார். பின்னர் ரோகித்துடன் ஜோடி சேர்ந்த தமிழக வீரர் விஜய் சங்கர் நியூசிலாந்து பந்துவீச்சை பதம் பார்த்தார். அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 43 ரன்களில் ஆட்டமிழந்தார் விஜய் சங்கர். பின்னர் வந்த ரிஷப் பண்ட் வந்த வேகத்தில் சிக்ஸர் பவுண்டரிகளுமாக விளாசி ரன் ரேட்டை உயர்த்தினார். 12 பந்தில் 28 ரன் விளாசிய நிலையில் பண்ட் ஆட்டமிழந்தார். கேப்டன் ரோகித் சர்மா 38, பாண்டியா 21, தோனி 2 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய அணி தடுமாறியது.

பின்னர் வந்த தினேஷ் கார்த்திக்-க்ருனால் பாண்டியா ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல கடைசிவரை போராடினர். இருப்பினும் இந்தியாவால் 20 ஓவர்களில் 208 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools