இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் – ஆஸ்திரேலியா தடுமாற்றம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இதில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் சூர்ய குமார் யாதவுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் அய்யர் இடம் பெற்றார். ஆஸ்திரேலிய அணியில் ரென்ஷா, ஸ்காட் போலண்ட் ஆகியோருக்கு பதிலாக டிராவிஸ் ஹெட், மேத்யூ குனேமேன் ஆகியோர் இடம் பெற்றனர். சுழற்பந்து வீச்சாளரான குனேமேன் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

இந்திய வீரர் புஜாரா 100-வது டெஸ்டில் களம் இறங்கினார். அவருக்கு சிறப்பு தொப்பியை முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், கவாஜா ஆகியோர் களம் இறங்கினர். அவர்கள் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினார்கள்.

ஆஸ்திரேலிய அணி தொடக்க ஜோடி 50 எடுத்தது. இதன் ஜோடியை முகமது சமி பிரித்தார். அவர் பந்து வீச்சில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவர் வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய மார்னஸ் லாபுசாக்னே – கவாஜாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். இந்திய சுழற் பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர் கொண்டு ஆடினர். 4 பவுண்டரிகளுடன் விளையாடிய மார்னஸ் லாபுசாக்னே அஸ்வின் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார்.

அடுத்து வந்த ஸ்மித் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் அஸ்வின் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் உணவு இடைவேளை வரை 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் சமி 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools