இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடர் நடக்கும் இடங்கள் மாற்றம்?

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் வெஸ்ட் இன்டீசுக்கு எதிரான தொடரில் சொந்த மண்ணில் விளையாடியது. இதன் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கிலும் இந்தியா முழுமையாக கைப்பற்றி ‘ஒயிட்வாஷ்’ செய்தது.

இந்திய அணி அடுத்து இலங்கையுடன் விளையாடுகிறது. இலங்கை அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக இந்தியா வருகிறது. 20 ஓவர் தொடர் வருகிற 24-ந்தேதி முதல் 27-ந் தேதி வரை நடைபெறுகிறது.

டெஸ்ட் தொடர் மார்ச் 4-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது. அதன் பிறகு வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவார்கள்.

ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

இந்தியா- தென் ஆப்பி ரிக்கா அணிகள் இடையேயான 20 ஓவர் போட்டிக்கான இடங்கள், தேதியை ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருந்தது.

அதன்படி முதல் 20 ஓவர் போட்டி ஜூன் 9-ந்தேதி சென்னையில் நடைபெறுகிறது. பெங்களூர், நாக்பூர், ராஜ்கோட், டெல்லி ஆகிய இடங்களில் முறையே ஜூன் 12, 14, 17 மற்றும் 19-ந் தேதிகளில் மற்ற 20 ஓவர் ஆட்டங்கள் நடைபெறுகிறது.

இந்தநிலையில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் போட்டிக்கான இடங்கள் மாற்றம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. கொரோனா மற்றும் பருவநிலை காரணமாக இந்த போட்டிக்கான இடங்களை மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மட்டும் 5 ஆட்டங்களை நடத்தலாமா என்று கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருகிறது.

இதுதொடர்பாக வருகிற 2-ந்தேதி நடைபெறும் கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது. மேலும் சி.கே.நாயுடு டிராபி, பெண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் லீக் ஆகியவை குறித்தும் முடிவு செய்யப்படுகிறது.

இந்திய கிரிக்கெட்டில் விளையாட்டு மேம்பாட்டின் பொது மேலாளராக முன்னாள் வேகப்பந்து வீரரும், முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினருமான அபய் குருவில்லா நியமிக்கப்படுகிறார். இது குறித்தும் 2-ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools