இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க இரு தரப்பு அமைச்சர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க முடிவு!

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் நிலவுகிறது. சிந்து நதி நீர் நிறுத்தம், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது.

சிம்லா ஒப்பந்தம் ரத்து, இந்திய விமானங்களுக்குப் பாகிஸ்தான் வான்பரப்பு மூடல் உள்ளிட்ட நடவைடிகைகளை பாகிஸ்தான் எடுத்துள்ளது. இதோடு நிற்காமல் இரு நாடுகளும் ராணுவ தாக்குதலுக்குத் தயாராகி வருகின்றன என்று தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க வெள்ளை மாளிகை விரும்புவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அவர் பேசியதாவது, “இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, இன்று அல்லது நாளை பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். அங்கு நடக்கும் அனைத்தையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம். நாங்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களுடன் வெளியுறவுத்துறை மட்டுமல்லாது, பல மட்டங்களில் தொடர்பில் இருக்கிறோம். தீர்வுக்காக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று கூறினார்.

நேற்றைய தினம், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க முப்படைகளுக்கும் பிரதமர் மோடி முழு சுதந்திரம் கொடுத்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது மேலும் பற்றத்தை அதிகரித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools