இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வசப்படுத்தி விட்டது. அடுத்ததாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் 3 ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசிலும், கடைசி இரு ஆட்டங்கள் அமெரிக்காவிலும் நடத்தப்படுகிறது.

இதன்படி இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டின் தரோபா நகரில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்கும் இந்திய அணியில் அஸ்வின், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன், தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர்குமார், அக்‌ஷர் பட்டேல், ஹர்ஷல் பட்டேல் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

ஒரு நாள் தொடரில் அணியை வழிநடத்திய ஷிகர் தவான், தொடர் நாயகன் சுப்மான் கில் ஆகியோருக்கு இடமில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி நிகோலஸ் பூரன் தலைமையில் விளையாடுகிறது. 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 13-ல் இந்தியாவும், 6-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools