இந்திய அணிக்காக விளையாடி, எனது பங்களிப்பை செய்தது பாக்கியம் – சாய் சுதர்ஷன் பேட்டி

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 116 ரன்னில் சுருண்டது. பின்னர் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் தமிழகத்தின் இளம் வீரரான சாய் சுதர்சன் அறிமுகம் ஆனார். மூன்று விடிவிலான கிரிக்கெட்டின் ஒட்டுமொத்தமாக இந்த போட்டியில் தான் இந்திய அணிக்காக அறிமுகம் ஆகியுள்ளார். அறிமுகம் ஆன முதல் போட்டியிலேயே 43 பந்தில் 9 பவுண்டரியுடன் 55 ரன்கள் விளாசி அசத்தினார்.

அறிமுக போட்டியிலேயே இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். ஷ்ரேயாஸ் அய்யருடன் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்தார். இந்த நிலையில் இந்திய அணியில் விளையாடியதன் மூலம் கனவு நனவாகியதாக சாய் சுதர்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

எல்லோரையும் போல் சிறுவயதில் இருந்து வளரும்போதே இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு எனக்கும் இருந்தது. கடின முயற்சியின் மூலம் கனவுகள் நனவாகும்.

இந்திய அணிக்காக விளையாடி, எனது பங்களிப்பை செய்தது பாக்கியம். இந்த நினைவுகளை மேலும் நீட்டித்துக் கொண்டு செல்ல பார்க்கிறேன். கே.எல். ராகுலிடம் இருந்து அறிமுகத்திற்கான இந்திய அணியின் தொப்பியை வாங்கியது சிறப்பு தருணம். ஷ்ரேயாஸ் அய்யருடன் இணைந்து விளையாடியது அமேசிங்.

இவ்வாறு சாய் சுதர்சன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் சிறப்பாக விளையாடியதன் மூலம் ஐபிஎல் ஏலத்தில் குஜராத் அணி இவரை ஏலம் எடுத்தது. குஜராத் அணிக்காக கடந்த சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports