X

இந்திய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சம்பளம் உயர்வு

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி சமீபத்தில் 2 ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டார்.

2021 ஆண்டு இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பைவரை அவர் பயிற்சியாளராக இருப்பார்.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துடன் ரவிசாஸ்திரியுடன் ஒப்பந்தம் முடிந்தது. உலக கோப்பையில் இந்திய அணி அரை இறுதியில் தோற்றதால் அவர் பயிற்சியாளர் பதவியில் நீட்டிக்கமாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கபில்தேவ் தலைமையிலான குழு ரவிசாஸ்திரியுடன் ஒப்பந்தத்தை நீட்டித்தது.

இந்த நிலையில் புதிய ஒப்பந்தத்தின்படி ரவிசாஸ்திரியின் சம்பளம் ஆண்டுக்கு ரூ.10 கோடியாக உயர்ந்துள்ளது. முன்பு அவர் ரூ.8 கோடி ஊதியம் பெற்று வந்தார். தற்போது ரவிசாஸ்திரியின் சம்பளம் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவருக்கு ஊதியம் ரூ.9.5 கோடி முதல் ரூ.10 கோடிவரை ஆண்டுக்கு கிடைக்கும். கடந்த 1-ந்தேதியில் இருந்து இந்த புதிய ஊதிய ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.

57 வயதான ரவிசாஸ்திரி இந்திய அணிக்கு முதல் மானேஜராக இருந்தார். 2007-ம்ஆண்டு வங்காளதேச பயணத்தின் போது அவர் அந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.

அதன் பிறகு 2014-2016 வரை ரவிசாஸ்திரி இந்திய அணியின் இயக்குனராக இருந்தார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக 2017-19 வரை நியமிக்கப்பட்டார். தற்போது மேலும் 2 ஆண்டுக்கு அவர் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருப்பார்.

ரவிசாஸ்திரியின் பயிற்சியின் கீழ் இந்திய அணி இரண்டு உலக கோப்பையில் (2015-2019) விளையாடி உள்ளது. இந்த இரண்டிலும் அரை இறுதியில் தோற்றது.

இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நீட்டிக்கப்பட்ட பரத்அருண், பீல்டிங் பயிற்சியாளராக நீட்டிக்கப்பட்ட ஆர். ஸ்ரீதர் ஆகியோரது சம்பளம் ஆண்டுக்கு ரூ.3½ கோடியாக உயர்த்தப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

பேட்டிங் பயிற்சியாளராக புதிதாக நியமிக்கப்பட்ட விக்ரம் ரத்தோருக்கு ஆண்டு ரூ.2½ கோடி முதல் ரூ.3 கோடிவரை சம்பளம் கிடைக்கும்.

Tags: sports news