இன்று பக்ரீத் பண்டிகை – குர்பானி வழங்கி இஸ்லாமியர்கள் கொண்டாட்டம்

அரபி மாதங்களில் 12-வது நிறைவு மாதமாக இடம் பெறுவது துல்ஹஜ் மாதம் ஆகும். இந்த மாதத்தின் பத்தாம் நாளன்று உலக முஸ்லிம்களால் வெகுவிமரிசையாக கொண்டாடப்படக்கூடியது ‘பக்ரீத் பண்டிகை’ ஆகும். ‘பக்ரா’ மற்றும் ‘ஈத்’ எனும் இரண்டு உருது வார்த்தைகளின் இணைப்புதான் ‘பக்ரீத்’ ஆகும். இதன் பொருள்- ‘ஆட்டைப் பலியிட்டு கொண்டாடப்படும் பெருநாள்’ என்பதாகும். மேலும் இதற்கு ‘குர்பானி பெருநாள்’ என்றும் பெயருண்டு.

‘குர்பானி’ என்றால் ‘தியாகம் செய்தல்’ என்பது அர்த்தமாகும். குர்பானி கொடுப்பது முஸ்லிம்கள் மீது ஹிஜ்ரி 2-ம் ஆண்டு கடமையாக்கப்பட்டது. இதற்கு காரணமாக ஒரு சரித்திர நிகழ்வும் உண்டு. நபி இப்ராகீம் (அலை) அவர்கள் தமது 86-ம் வயதில் குழந்தை வரம் கேட்டு இறைவனிடம் பிரார்த்தனை செய்தபோது அவர்களுக்கு இஸ்மாயீல் எனும் ஆண் குழந்தையை இறைவன் வழங்கினான். சில ஆண்டுகள் கழித்து அந்தக்குழந்தையை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவதாக கனவு கண்டார்.

இந்த இறை உத்தரவை செயல்படுத்திட குழந்தையை அறுத்துப் பலியிட துணிந்தார். அவரின் தியாகத்தை ஏற்றுக்கொண்ட இறைவன் குழந்தைக்கு பதிலாக பிராணி ஒன்றை பலியிட வழிகாட்டினார். இதுகுறித்து திருக்குர்ஆன் கூறுவதாவது: “ஆகவே அவ்விருவரும் இறைவனின் விருப்பத்திற்கு முற்றிலும் வழிபட்டு இப்ராகீம் தன் மகன் இஸ்மாயீலை அறுத்துப் பலியிட முகங்குப்புறக் கிடத்தினார். அச்சமயம் நாம் ‘இப்ராகீமே என அழைத்து உண்மையாகவே நீங்கள் உங்களுடைய கனவை மெய்யாக்கி வைத்து விட்டீர்கள் என்றும் நன்மை செய்பவருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்’ என்றும் கூறி ‘நிச்சயமாக இது மகத்தானதொரு பெரும் சோதனையாகும்’ என்றும் கூறினோம்.

ஆகவே மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம். அவருடைய கீர்த்தியைப் பிற்காலத்திலும் நிலைக்க வைத்தோம்”. (திருக்குர்ஆன் 37:103-108) ‘நபியே நீர் உம் இறைவனை தொழுது குர்பானியும் கொடுப்பீராக’ (திருக்குர்ஆன் 108:3) இந்த தியாகத்திருநாள் குறித்த நபிமொழிகள் வருமாறு:

‘துல்ஹஜ் 10-ம் நாளன்று ஆதமின் மகன் செய்யும் செயல்களில் இறைவனுக்கு மிகவும் விருப்பமானது கால்நடைகளை குர்பானி கொடுப்பதாகும். அவைகள் மறுமைநாளில் தமது கொம்புகளுடனும் ரோமங்களுடனும் கால்குளம்புகளுடனும் அவர்களை வந்தடையும். அறுக்கப்படும் பிராணிகளின் ரத்தங்கள் பூமியில் விழும் முன்பாகவே இறைவனிடம் அவை சென்றடைகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்: திர்மிதி) ‘குர்பானி கொடுப்பதினால் எங்களுக்கு என்ன கிடைக்கும்?’ என நபித்தோழர்கள் வினவிய போது ‘அதன் ஒவ்வொரு ரோமத்திற்கும் ஒரு நன்மை உண்டு’ என நபி (ஸல்) பதில் தெரிவித்தார்கள். (அறிவிப்பாளர்: ஜைத் பின் அர்க்கம் (ரலி) நூல்: அஹ்மது) இறைவன் நமக்கு வழங்கிய வாழ்க்கை மற்றும் செல்வங்கள் கால்நடைகள் ஆகிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்திட தியாகப்பெருநாள் கொண்டாடப்படுகிறது.

இதன்மூலம் இறை நெருக்கத்தையும் பெறமுடிகிறது. இறைவனுக்கு அடிபணிதலையும் காட்டமுடிகிறது. குர்பானி என்பது தமக்கும் தமது குடும்பத்தாருக்கும் அனைத்து சமுதாய ஏழை எளியோருக்கும் உணவு மற்றும் மாமிசங்களை வழங்கி உணவு வழங்குவதை விரிவுபடுத்தி பசியில்லாத சமுதாயத்தை உருவாக்குவதும் உறவுகளை ஆதரிப்பதும் விருந்தினர்களை உபசரிப்பதும் அண்டை அயலாரை அன்புடன் நடத்துவதும் நலிந்தோருக்கு தர்மம் செய்வதும் ஆகும்.
குர்பானி என்பது நபி இப்ராகீம் (அலை) அவர்களின் தியாக வழிமுறையை நினைவு கூர்வதும் அதை கடைப்பிடிப்பதும் ஆகும். குர்பானி என்பது இறைவனின் கூற்றை உண்மைப்படுத்துவதும் இறைவிசுவாசத்தின் மீது உறுதியாக இருப்பதின் சாட்சியமும் ஆகும். இறைவன் பிரியப்படும் விதமாகவும் அவன் பொருந்திக் கொள்ளும் விதமாகவும் அவனது உத்தரவை வெகுவிரைவாக செயல்படுத்துவதும் தான் குர்பானியாகும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news