இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு – 7 பேர் பலி

வடகிழக்குப் பருவமழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில், மேக வெடிப்பு எனும் வகையில் குறிப்பிட்ட பகுதியில் அளவுக்கு மிஞ்சிய மழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் கனமழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில் சோலன் மாவட்டத்தில் மேக வெடிப்பு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சோலன் மாவட்டத்தில் உள்ள மம்லிக் கிராமத்தில் மேக வெடிப்பிற்கு பிறகு 6 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் 2 வீடுகளும், ஒரு மாட்டு தொழுவமும் அடித்துச் செல்லப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மேக வெடிப்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

கனமழையைக் கருத்தில் கொண்டு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறு தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மற்றும் அனைத்து டிசிக்களுக்கும் முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார். நிர்வாக ஊழியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், சாலைகள், மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிகளை சீராக பராமரிக்க வேண்டும் என்றும் முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

இமாச்சல பிரதேசத்தில் இதுவரை கனமழை தொடர்பாக 257 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news