இரண்டாவது முறையாக தேசிய விருது வென்றது ஆசிர்வாதம் தான் – தனுஷ் நெகிழ்ச்சி

அசுரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இவ்விருதை பெறுவது இது இரண்டாவது முறை. ஏற்கனவே ஆடுகளம் படத்திற்காக தேசிய விருதை வென்றுள்ளார்.

இந்நிலையில், தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியை நடிகர் தனுஷ் அறிக்கை மூலம் வெளிப்படுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அசுரன் படத்திற்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது என்கிற மகிழ்ச்சியான செய்தியோடு கண் விழித்தேன். சிறந்த நடிகராக ஒரு தேசிய விருதை வென்றதே கனவு போல் இருந்தது. ஆனால், தற்போது இரண்டாவது முறையாக அவ்விருதை வென்றிருப்பது உண்மையிலேயே ஆசிர்வாதம்தான். நான் இந்த அளவுக்கு வருவேன் என நினைத்துப் பார்த்ததில்லை.

நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டி உள்ளது. முதலில் அம்மா, அப்பா, என்னுடைய குருவான என் அண்ணனுக்கு நன்றிகள். ‘சிவசாமி’ கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்த வெற்றிமாறனுக்கு நன்றி.

வெற்றிமாறன், நான் உங்களை முதன்முறையாக பாலுமகேந்திரா அவர்களின் அலுவலகத்தில் சந்தித்தபோது, நீங்கள் என் நண்பனாக, துணைவனாக, சகோதரனாக மாறுவீர்கள் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. உங்களுடைய இயக்கத்தில் நான்கு படங்களில் நடித்ததற்காகவும், இரண்டு படங்களை உங்களோடு சேர்ந்து தயாரித்ததற்காகவும் மிகவும் பெருமைப்படுகிறேன்.

நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும், நான் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் அளவிட முடியாதது. எனக்காக அடுத்து என்ன கதை எழுதியிருக்கிறீர்கள், என்பதை அறிய ஆவலோடு காத்திருக்கிறேன்..

மேலும், தேசிய விருது ஜூரிகளுக்கும், தயாரிப்பாளர் தாணுவுக்கும், அசுரனில் தன்னுடன் நடித்தவர்களுக்கும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கும், ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ள தனுஷ், ”எண்ணம்போல் வாழ்க்கை” என்று குறிப்பிட்டு அறிக்கையை முடித்திருக்கிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools