இர்பான் மீது இரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

பிரபல யூடியூபரான இர்பான் ‘இர்பான் வியூஸ்’ எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவியூ செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார்.

யூடியூபர் இர்பானுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தோடு சேர்ந்து சமையல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை அவர் தன்னுடைய ரசிகர்களிடமும் பகிர்ந்து கொண்டார்.

இந்நிலையில் யூடியூபர் இர்பான் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்தார். அதோடு துபாயில் பரிசோதனை செய்து, தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்து யூடியூப்பில் கொண்டாட்ட வீடியோவை வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

வயிற்றில் இருக்கும் குழந்தை பாலினத்தை பரிசோதனை மூலம் தெரிவிக்கக் கூடாது என சட்டம் உள்ளது. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதனால் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க 3 பேர் கொண்ட குழுவை நியமித்தது. மேலும், காவல்துறையில் புகார் அளிக்கவும் முடிவு செய்தது. அத்துடன் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது.

வீடியோ தொடர்பாக கடும் விமர்சனம் எழுந்த நிலையில் வீடியோவை யூடியூப்பில் இருந்து நீக்கினார் இர்பான். ஆனால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த பின்னர், வீடியோ வெளியிட்டதற்காக அவர் டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குநரிடம் மன்னிப்பு கடிதம் வழங்கினார். அத்துடன் மன்னிப்பு வீடியோ வெளியிடுவதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

மன்னிப்பு கோரியதை அடுத்து இர்பான் மீது நடவடிக்கை எடுக்காமலிருக்க சுகாதாரத்துறை முடிவு செய்தது. ஆனால் இப்போது வரையும் இர்பான் இந்த விவகாரம் தொடர்பாக மன்னிப்பு வீடியோ வெளியிடவில்லை.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ள இருபானுக்குக் கருணை காட்டாமல் உரிய சட்ட நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools