X

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – இங்கிலாந்து வெற்றி

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை 42.3 ஓவரில் 185 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் குசால் பெராரா73 ரன்னும், ஹசரங்கா 54 ரன்னும் எடுத்தனர், மற்றவர்கள் நிலைத்து நிற்காமல் விரைவில் ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து அணி சார்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டும், வில்லே 3 விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோவ் அதிரடியாக ஆடி 43 ரன்னில் வெளியேறினார். லிவிங்ஸ்டோன் 9 ரன்னிலும், மார்கன் 6 ரன்னிலும், சாம் பில்லிங்ஸ் 3 ரன்னிலும், மொயீன் அலி 28 ரன்னிலும் அவுட்டாகினர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஜோ ரூட் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.

இறுதியில் இங்கிலாந்து அணி 34.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜோ ரூட் 79 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது கிறிஸ் வோக்சுக்கு அளிக்கப்பட்டது.