இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டி – இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது

இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2 ஆவது டி20 போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக குசால் மெண்டிஸ், நிசாங்க இறங்கினர். நிசாங்க 10 ரன்களிலும், கமிந்து மெண்டிஸ் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஓரளவு சிறப்பாக ஆடிய குசால் பெரரா 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 161 ரனக்ளை எடுத்தது. இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், அக்சர் பட்டேல், ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

162 ரன்களை துரத்திய இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணி முதல் ஓவரின் மூன்று பந்துகளை மட்டும் சந்தித்த நிலையில், மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டது. சுமார் ஒரு மணி நேரம் வரை மழை பெய்தது. பிறகு மீண்டும் போட்டி தொடங்கியது. மழையால் ஒரு மணி நேர ஆட்டம் தடைபட்டதால் ஓவர்கள் குறைக்கப்பட்டன. டிஎல்எஸ் விதிப்படி இந்திய அணி 7.3 ஓவர்களுக்குள் 72 ரன்களை எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி துவக்க வீரர்களாக களமிறங்கியது. சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். ஜெய்ஸ்வால் 15 பந்துகளில் 30 ரன்களையும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 பந்துகளில் 26 ரன்களையும் எடுத்தனர். இறுதியில் இந்திய அணி 6.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது.

இந்தியா தரப்பில் ஹர்திக் பாண்டியா 9 பந்துகளில் 22 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி கைபற்றிவிட்டது. இரு அணிகள் இடையிலான மூன்றாவது போட்டி நாளை நடைபெறுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools