இலங்கைக்கு எதிரான 3 வது டி 20 – இந்தியா வெற்றி பெற்றது

இலங்கை நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. அந்த வகையில், தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்றிரவு நடைபெற்றது.

சம்பிரதாய அடிப்படையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஜோடி முறையே 10 மற்றும் 39 ரன்களில் ஆட்டமிழந்தது. அடுத்து வந்த சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.

இவரை தொடர்ந்து வந்த வீரர்களில் ஷிவம் தூபே (13), ரியான் பராக் (26) மற்றும் வாஷிங்டன் சுந்தர் (25) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது. இலங்கை சார்பில் மஹேஷ் தீக்ஷனா 3 விக்கெட்டுகளையும், வமிண்டு ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும், சமிண்டு விக்ரமசிங்கே, அசிதா பெர்னான்டோ மற்றும் ரமேஷ் மென்டிஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

எளிய இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு வழக்கம் போல பதும் நிசங்கா (26), குசல் மெண்டிஸ் (43) மற்றும் குசல் பெரரா (46) நல்ல துவக்கம் கொடுத்தனர். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். எனினும், இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை சேர்த்தது.

இதனால் போட்டி சமனில் முடிந்து, சூப்பர் ஓவர் கொண்டுவரப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 2 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. சூப்பர் ஓவரில் இந்திய அணிக்கு வாஷிங்டன் சுந்தர் பந்துவீசினார்.

3 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். இவர் எதிர்கொண்ட முதல் பந்தை பவுண்டரிக்கு விளாச, இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றி மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools