இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன் மறுசீரமைப்பு செய்வதற்காக பேச்சுவார்த்தை – அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்கிறார்

பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கை ஏற்கனவே பிற நாடுகளிடம் பெற்ற கடன்கள் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன், 2.9 பில்லியன் டாலர் (சுமார் ரூ.24 ஆயிரம் கோடி) கடன் வழங்க சர்வதேச நிதியம் ஒப்புக்கொண்டது. அதன் முதல் தவணையை சமீபத்தில் வழங்கியது. அதில் இருந்து இந்தியாவுக்கு திருப்பித்தர வேண்டிய ஒரு தவணை தொகையை இலங்கை அளித்தது.

இதற்கிடையே, இலங்கை ஏற்கனவே பெற்ற கடன்களை மறுசீரமைப்பு செய்வதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட உள்ளது. அதை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று (வியாழக்கிழமை) அமெரிக்காவில் அறிவிக்கிறார்.

இதுகுறித்து சர்வதேச நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் கூட்டங்களை முன்னிட்டு, ஜப்பான் நிதி மந்திரி சுனிச்சி சுசுகி, இந்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பிரான்ஸ் நிதி அமைச்சகத்தின் உயர் அதிகாரி இமானுவேல் மவுலின் ஆகியோர் வியாழக்கிழமை வாஷிங்டனில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துகிறார்கள். அதில், இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை தொடக்கத்தை கூட்டாக அறிவிக்கிறார்கள்.

இலங்கைக்கு கடன் கொடுத்துள்ள மேற்கண்ட 3 நாடுகளும் ஒருங்கிணைந்த கடன் மறுசீரமைப்புக்காக நெருங்கி பணியாற்றி வருகின்றன. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவும், இலங்கை நிதித்துறை இணை அமைச்சர் ஷேகன் செமசிங்கேவும் காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools