இளையராஜாவை சந்தித்த ராமராஜனின் ‘சாமானியன்’ படக்குழுவினர்

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்த ராமராஜன் தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக சாமானியன் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களை இயக்கிய ராகேஷ் இயக்குகிறார். இதனை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார்.

இதன் கதாநாயகியாக நக்சா சரண் நடிக்கிறார். மேலும் முக்கிய வேடங்களில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜாராணி பாண்டியன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியிலும் என ஐந்து மொழிகளில் தயாராகிறது. ராமராஜன் படங்களுக்கு வெற்றியின் பின்னணியில் தூணாக இருந்து அவரது படங்களுக்கு காலத்தால் அழியாத பாடல்களை கொடுத்தவர் இளையராஜா. தற்போது இவர்கள் இருவரும் 23 வருடங்களுக்கு பிறகு ‘சாமானியன்’ என்கிற படத்தின் மூலம் மீண்டும் கைகோர்த்துள்ளனர்.

இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு தயாரிப்பாளர் வி.மதியழகன் இயக்குனர் ஆர்.ராகேஷ் ஆகியோருடன் நடிகர் ராமராஜன் சென்று இளையராஜாவை சந்தித்து தங்களது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது படப்பிடிப்பு குறித்து பல விவரங்களை இளையராஜா கேட்டு அறிந்துகொண்டுள்ளார். அப்போது மொத்த படமும் முடிந்ததுமே தன்னுடைய இசைப்பணிகளை துவங்குவதாக இளையராஜா உறுதி அளித்துள்ளார். விரைவில் இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்கி நான்கு நாட்களில் நிறைவடைய உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools