இ-சேவை மையங்கள் மூலம் எல்.எல்.ஆர் உரிமம் பெறலாம் – தமிழக அரசு போக்குவரத்து கமிஷ்னர் அறிவிப்பு

தமிழக அரசின் போக்குவரத்து கமிஷனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தற்போது எல்.எல்.ஆர். (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெற ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளையும், இடைத்தரகர்களையும், தனியார் இணையதள மையங்களையும் பொதுமக்கள் அணுகவேண்டிய நிலை உள்ளது. இதில் தேவையற்ற செலவு பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. மேலும் இந்த முறையில் வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் உள்ளது.

அத்துடன் இந்த சேவைகளைப் பெறுவதற்கு பொதுமக்கள் அருகாமையில் உள்ள நகரங்களுக்கு வரவேண்டிய நிலை உள்ளது. இதனைத் தவிர்ப்பதற்காகவும், இது குறித்து எந்தவித புகார்களுக்கும் இடம் அளிக்காத வகையில் இதனை மேம்படுத்துவதற்கும், நடைமுறையில் உள்ள சிக்கல்களைக் களைவதற்கும், பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகாமையிலேயே இந்த சேவையை கொண்டு சேர்ப்பதற்கும் தமிழ்நாடு அரசு முடிவு செய்து உள்ளது.

அதன் அடிப்படையில் முதலமைச்சர் ஆணைப்படியும், போக்குவரத்து துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படியும் இனி மாநிலம் முழுவதும் உள்ள 55 ஆயிரத்துக்கும் அதிகமான இ-சேவை மையங்கள் மூலம் இந்த எல்.எல்.ஆர். பெற விண்ணப்பிக்கும் முறை 13-ந் தேதி (இன்று) முதல் நடைமுறைக்கு வருகிறது.

இ-சேவை மையங்கள் மூலம் இந்த சேவையினைப் பெறுவதற்கு பொதுமக்கள் கூடுதலாக இ-சேவை மையத்திற்கான சேவைக் கட்டணமாக ரூ.60 செலுத்த வேண்டும். ஒப்புதல் அளிக்கப்பட்ட எல்.எல்.ஆரை வழக்கம் போல விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தொடர்ந்து மோட்டார் வாகனத்துறை மூலம் பொதுமக்கள் பெறக்கூடிய இதர சேவைகளையும் (வாகன ஓட்டுநர் உரிமம், டிரைவிங் லைசென்சு), பிரமிட், உரிமை மாற்றம் உள்ளிட்ட) இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools