X

ஈராக் நாட்டில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் – இந்தியர்களுக்கு எச்சரிக்கை

கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 3ம் தேதி) அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்கா சவால் விடுத்தது. அமெரிக்காவின் செயல்களுக்கு பழி தீர்ப்போம் என ஈரானும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தது.

அதன்படி ஈராக்கில் உள்ள அமெரிக்க படைக்ளை குறிவைத்து, ஈரான் 12க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்திவருவதால் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இதையடுத்து ஈராக் நாட்டுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

‘போர் பதற்றம் நிலவுவதால் ஈராக், ஈரான் மற்றும் வளைகுடா வான் பகுதியை இந்திய விமானங்கள் பயன்படுத்த வேண்டாம். மறு உத்தரவு வரும் வரை, இந்தியர்கள் எந்தவித அத்தியாவசிய தேவையில்லாமல் ஈராக் நாட்டிற்கு செல்ல வேண்டாம்.

ஈராக்கில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருங்கள். ஈராக்கினுள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஈராக்கில் உள்ள இந்தியர்களுக்கு பாக்தாத், ஏர்பிலில் உள்ள தூதரகங்கள் தொடர்ந்து உதவிகளை செய்யும்’ என வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

Tags: south news