ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – வாக்குப் பதிவு தொடங்கியது

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.

இந்த தேர்தலில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பெண்களும், 25 திருநங்கைகளும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதையொட்டி 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

தேர்தல் பணியில் 1,206 அலுவலர்கள் பணியில் உள்ளனர். இதில் 32 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உள்ளன. அங்கு துணை ராணுவத்தினர் ரோந்துப்பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும், வெப் கேமராக்களும் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

தேர்தல் முடிவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையமான சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு இன்று கொண்டு வரப்படும். அங்கு மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. முன்னதாக, ஏஜெண்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்பின் மின்னணு இயந்திரங்கள் மீண்டும் சரி செய்யப்பட்டு 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools