உக்ரைன் போரில் ரஷ்யாவிக்கு ஈரான் ஆயுத உதவி செய்தது – அமெரிக்கா

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா அந்நாட்டின் பல நகரங்களை கைப்பற்றிய போது, உக்ரைன் ராணுவம் தொடர்ந்து ரஷிய படையை எதிர்த்து சண்டையிட்டு வருகிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம், நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றன.

இந்நிலையில் ரஷியாவுக்கு ஈரான் ஆயுத உதவி வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், உக்ரைன் மீதான படையெடுப்பில் பயன்படுத்துவதற்கு ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட ட்ரோன்கள் உட்பட நூற்றுக்கணக்கான ஆளில்லா வான்வழி வாகனங்களை ரஷியாவிற்கு ஈரான் வழங்கி வருவதாக கூறினார்.

தங்களுக்கு கிடைத்த தகவலின்படி அவற்றை பயன்படுத்துவது குறித்து இந்த மாதத்தில் ரஷிய படைகளுக்கு பயிற்சி அளிக்கவும் ஈரான் தயாராகி வருகிறது என்றும் அவர் கூறினார். முன்னதாக சவுதி அரேபியாவைத் தாக்க ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் இதேபோன்ற ஆளில்லா வான்வழி வாகனங்களை வழங்கியதாக சல்லிவன் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவிற்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து தமது சுற்றுப்பயணத்தின் போது பைடன் ஆலோசிக்க உள்ள நிலையில், ஈரான் குறித்த சல்லிவன் குற்றச்சாட்டு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools