உறக்க நிலையில் இருக்கும் பிரக்யான் ரோவர் 22 ஆம் தேதி மீண்டும் ஆய்வு தொடங்க வாய்ப்பு – இஸ்ரோ அறிவிப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14-ந்தேதி பகல் 2.35 மணிக்கு ‘எல்.வி.எம்.3 எம்.4’ ராக்கெட் மூலம் ‘சந்திரயான்-3’ விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

இது புவிவட்டப்பாதை, நிலவு வட்டப்பாதையை கடந்து கடந்த மாதம் 23-ந்தேதி மாலை 6.04 மணி அளவில் விண்கலத்தில் இருந்த ‘விக்ரம் லேண்டர்’ 40 நாட்கள் பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது. அடுத்த 2 மணி நேரத்திற்கு பிறகு ‘விக்ரம் லேண்டரில்’ இருந்து ‘பிரக்யான் ரோவர்’ வெளியே வந்தது.

இதனை ‘லேண்டர்’ ஒரு குழந்தையைப் போல் கண்காணித்து வந்தது. ரோவர் வெளியான அந்த நாள், நிலவில் 14 நாட்களுக்கு (ஒரு நிலவு நாள்) பிறகு இரவு முடிந்து, பகல் ஆரம்பித்த நாள். அன்றைய தினமே ரோவர் ஆய்வுப்பணியை தொடங்கியது.

ரோவரில் உள்ள ‘லிப்ஸ்’ எனப்படும் ‘ஸ்பெக்ட்ரோஸ்கோப்’ கருவி, நிலவில் கந்தகம் இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்தது. தொடர்ந்து, அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டேனியம், மாங்கனீசு, சிலிகான் மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை ரோவர் உறுதி செய்ததுடன் பல்வேறு கோணங்களில் லேண்டருடன் சேர்ந்து நிலவின் தென் துருவத்தில் மேற்பரப்பில் பல்வேறு புகைப்படங்களையும் எடுத்து பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைத்தது.

தொடர்ந்து நிலவு நாள் முடிவடைந்து அங்கு இரவு தொடங்கியபோது இருள் சூழ்ந்த நிலவின் தென்துருவத்தில் ரோவர் மற்றும் லேண்டரால் ஆய்வுப்பணியில் ஈடுபட முடியவில்லை. இதனால் கடந்த வாரம் நிலவின் தென் துருவத்தின் மேல்பரப்பில் ‘பிரக்யான் ரோவர்’ உறக்க நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

இதனைத்தொடர்ந்து லேண்டரும் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் நிலவில் முதல் 14 நாட்கள் சூரிய வெளிச்சம் இருந்தபோது, ரோவரில் இருந்த பேட்டரிகள் சோலார் தகடுகள் மூலம் சார்ஜ் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வருகிற 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சூரியன் உதிக்க இருக்கிறது. அப்போது மீண்டும் உறக்க நிலையில் இருக்கும் ரோவரில் உள்ள பேட்டரி உதவியுடன் தட்டி எழுப்பி மீண்டும் ஆய்வுப்பணியில் ஈடுபடுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேபோல் லேண்டரையும் உறக்கத்தில் இருந்து எழுப்பி, ஆய்வுப்பணியில் ஈடுபடுத்துவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். தற்போதைய நிலையில் அதன் பேட்டரியில் முழு சார்ஜ் இருக்கிறது. அதில் உள்ள சோலார் பேனல் வருகிற 22-ந் தேதி நிலவில் அந்த இடத்தில் மீண்டும் சூரியன் உதயமாகும்போது சூரிய சக்தியை பெறும். ரோவர் அடுத்தக்கட்டப் பணிகளுக்கு மீண்டும் ‘சுவிட்ச் ஆன்’ ஆகி மீண்டும் ஆய்வுப்பணியில் ஈடுபடும் என்று நம்புகிறோம். அதுவரையிலும் நிலவுக்கான இந்தியாவின் தூதராக அது அங்கேயே நிலைகொண்டிருக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news