உலகக் கோப்பிஅ கிரிக்கெட் – நாளை ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மோதல்

13-வது ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அகமதாபாத்தில் கடந்த 5-ந்தேதி தொடங்கியது. 10 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை ரவுண்ட் ராபின் முறையில் மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

நேற்றுடன் 8 ஆட்டங்கள் முடிந்துவிட்டன. நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் தலா 4 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளன. இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வங்காளதேசம் தலா 2 புள்ளிகள் பெற்றுள்ளன. ஆஸ்திரேலியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகியவை புள்ளி எதுவும் பெறவில்லை.

டெல்லியில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. உலக கோப்பை போட்டியின் 10-வது லீக் ஆட்டம் லக்னோவில் நாளை (12-ந்தேதி) பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. இதில் பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா- கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

தென் ஆப்பிரிக்கா தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 102 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் அந்த அணி 428 ரன் குவித்து சாதனை படைத்தது. குயின்டன் டி காக், வான்டர் டூசன் உள்ளிட்ட 3 வீரர்கள் சதம் அடித்தனர். மார்க்ராம் அதிவேகத்தில் (49 பந்து) சதம் அடித்து சாதனை படைத்தார்.

தென் ஆப்பிரிக்க அணி உலக கோப்பை தொடருக்கு முன்பு தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை தொடர்ச்சியாக 3 ஆட்டத்தில் வீழ்த்தி இருந்தது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் விளையாடும். ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் தென் ஆப்பிரிக்கா உள்ளது.

ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றது. இந்தப் போட்டியில் அந்த அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. சுமித், வார்னர் மட்டுமே நன்றாக பேட்டிங் செய்தனர். அதே நேரத்தில் பந்துவீச்சு அபாரமாக இருந்தது.

தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்து ஆஸ்திரேலியா முதல் வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை. இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். உலக கோப்பையின் சிறந்த போட்டிகளில் ஒன்றாக இருக்கும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports