உலகின் தலை சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் தவானும் ஒருவர் – கங்குலி பாராட்டு

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை தோற்கடித்தது. இதில் கொல்கத்தா நிர்ணயித்த 179 ரன்கள் இலக்கை டெல்லி அணி 18.5 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. டெல்லி தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 97 ரன்களுடன் (63 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

தவானுக்கு சதம் அடிக்க நல்ல வாய்ப்பு இருந்தது. வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்ட போது, அவர் மூன்று இலக்கத்தை தொட 3 ரன் தேவையாக இருந்தது. அப்போது காலின் இங்ராம் (14 ரன்) சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்து விட்டார்.

20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் தவானின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஆட்டநாயகன் விருது பெற்ற 33 வயதான தவான் கூறுகையில், ‘சதம் அடிப்பது எனக்கு விருப்பமான ஒன்று தான். 100 ரன் எடுத்திருந்தால் அது 20 ஓவர் கிரிக்கெட்டில் எனது முதல் சதமாக இருக்கும் என்பதையும் அறிவேன். ஆனால் தனிப்பட்ட சாதனையே விட அணியின் லட்சியமே முக்கியம். அதனால் தான் முந்தைய பந்தில் ‘ரிஸ்க்’ எடுக்காமல் ஓடி ஒரு ரன் எடுத்தேன். 97 ரன்கள் எடுத்ததே எனக்கு சதம் மாதிரி தான்’ என்று குறிப்பிட்டார்.

வெற்றிக்கு பிறகு டெல்லி அணியின் ஆலோசகர் சவுரவ் கங்குலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தொடர்ச்சியாக 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றது மிகவும் திருப்தி அளிக்கிறது. கொல்கத்தா ஈடன்கார்டனில் எல்லாமே சிறப்பு வாய்ந்தது தான். நாட்டின் மிகச்சிறந்த மைதானம் இது. அபாரமாக பந்து வீசி அவர்களை 178 ரன்களில் கட்டுப்படுத்தி இருக்கிறோம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது 200 ரன்கள் எடுக்கக்கூடிய ஆடுகளம். அதனால் தான் எளிதாக சேசிங் செய்து விட்டோம்.

இன்றைய ஆட்டத்தில் ஷிகர் தவான், தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் மிகச்சிறந்த வீரர்கள் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இந்த வரிசையில் 4-வதாக டோனியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக தவான் திகழ்கிறார். நிலைத்து நின்று அதிரடியாக ஆடத் தொடங்கி விட்டால், அவரை எதிரணி பவுலர்கள் கட்டுப்படுத்துவது கடினம். குறுகிய வடிவிலான போட்டியில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய ஒரு தரமான ஆட்டக்காரர் தவான்.

உலக கோப்பை கிரிக்கெட் வேறு வடிவிலான (50 ஓவர்) போட்டி. தவான் ஏற்கனவே இங்கிலாந்து மண்ணில் நன்றாக ஆடி இருக்கிறார். உலக கோப்பையிலும் அவர் அசத்துவார்.

இவ்வாறு கங்குலி கூறினார்.

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது, ‘நோ-பால்’ மறுக்கப்பட்டதால் சென்னை கேப்டன் டோனி மைதானத்திற்குள் நுழைந்து நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரம் குறித்து கங்குலியிடம் கேட்டபோது, ‘எல்லோரும் மனிதர்கள் தானே. இங்கு நான் அவரது போட்டி மனப்பான்மையை தான் பார்க்கிறேன். அது வியப்புக்குரியது’ என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news