உலக கோப்பைக்கான அணியை தேர்வு செய்துவிட்டோம் – கோலி தகவல்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றி முத்திரை பதித்தது. டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த கடைசி ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன் குவித்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 237 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 35 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஆஸ்திரேலியா முதல் 2 போட்டியில் தோற்று தொடர்ச்சியாக 3 ஆட்டத்தில் வென்று முத்திரை பதித்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றி உள்ளது. 2009-ம் ஆண்டு 4-2 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

இந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

273 ரன் எடுக்கக்கூடிய இலக்குதான். கடைசி நேரத்தில் அவர்கள் எங்களை விட கொஞ்சம் சிறப்பாக செயல்பட்டனர். 14 முதல் 20 ரன்கள் வரை கூடுதலாக கொடுத்து விட்டோம். ஆஸ்திரேலியா வழக்கத்தை விட சிறப்பாக ஆடினார்கள். இக்கட்டான நேரத்தில் அவர்கள் துணிச்சலான முடிவை எடுத்தார்கள். இந்த வெற்றிக்கு ஆஸ்திரேலியா தகுதியானது.

இந்த தொடரை நாங்கள் இழந்ததற்கு எந்த காரணமும் முன்வைக்க முடியாது. பல மாதங்களாக விளையாடி கொண்டு இருக்கிறோம் என்பதில் பெருமைப்படுகிறேன். ஆஸ்திரேலிய தொடரில் வீரர்கள் செய்த தவறுகள் உலகக்கோப்பையில் எதிரொலிக்காது.

உலகக்கோப்பை போட்டிக்கான 11 பேர் கொண்ட அணி வீரர்களை முடிவு செய்து விட்டோம். யார் எந்த வரிசையில் ஆடுவது என்பது பற்றி தீர்மானிக்கப்பட்டு விட்டது. ஆட்டத்தின் தன்மைக்கு ஏற்றவாறு ஒரு மாற்றம் செய்யப்படும். ஹர்த்தி பாண்ட்யா மீண்டும் அணிக்கு திரும்புவார். உலகக்கோப்பை அணியில் எந்தவித குழப்பமும் இல்லை. ஒரு இடத்துக்கு மட்டுமே விவாதிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news