உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடனான் போட்டியை இந்தியா நிராகரிக்குமா?

காஷ்மீரில் உள்ள புலவாமா மாவட்டத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் இந்திய துணை ராணுவ படை வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. பாகிஸ்தானுடன் விளையாட்டு உறவை துண்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்துள்ளனர்.

இங்கிலாந்தில் நடக்க உள்ள 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது ஜூன் 16-ந்தேதி மான்செஸ்டரில் நடக்கும் லீக்கில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோத வேண்டி இருக்கிறது. இந்த ஆட்டத்தை இந்திய அணி புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இது தொடர்பாக மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத்திடம் நேற்று கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் அளித்த பதிலில் ‘கிரிக்கெட் விவகாரத்தில் நான் எந்த கருத்தும் சொல்லமாட்டேன். இது சர்வதேச கிரிக்கெட் தொடர். இதில் விளையாடுவதா? வேண்டாமா? என்பதை இந்திய கிரிக்கெட் வாரியமும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐ.சி.சி.) பாதுகாப்பு மற்றும் நிலைமைக்கு தக்கபடி இறுதி முடிவை மேற்கொள்ளும்’ என்று பதில் அளித்தார்.

மேலும் அவர் கூறும் போது, ‘உலக கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது என்ற வேண்டுகோள் கொஞ்சம் நியாயமானது தான். பல சினிமா படங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதை நீங்கள் பார்த்து இருக்கலாம். விஷயம் வழக்கமான நிலையில் இல்லை. அவர்களின் கவலையை நான் புறக்கணிக்க விரும்பவில்லை. விளையாட வேண்டாம் என்று சொல்வதற்குரிய நேரம் தான் இது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை’ என்றார்.

இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘உலக கோப்பை போட்டி நெருங்கும் போது, பாகிஸ்தானுடன் விளையாடுவோமா, இல்லையா என்பது தெளிவாக தெரிய வரும். உலக கோப்பை போட்டி அட்டவணையில் மாற்றம் ஏதும் செய்யமாட்டோம் என்று ஐ.சி.சி. ஏற்கனவே கூறி விட்டது. எனவே பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடக்கூடாது என்று மத்திய அரசு விரும்பினால், நாங்கள் விளையாட மாட்டோம். அவ்வாறு ஆட முடியாமல் போனால் அதற்குரிய புள்ளியை நாம் இழக்க நேரிடும். ஒரு வேளை இறுதிப்போட்டியில் நாம் பாகிஸ்தானுடன் மோத வேண்டி இருந்து, அதையும் புறக்கணித்தால் இறுதி ஆட்டத்தில் விளையாடாமலேயே பாகிஸ்தான் உலக கோப்பையை வென்று விடும். இந்த விஷயத்தில் இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை.’ என்றார்.

ஐ.சி.சி. கூட்டம் வருகிற 27-ந்தேதி முதல் மார்ச் 2-ந்தேதி வரை துபாயில் நடக்கிறது. இந்த கூட்டத்தில், இந்தியா-பாகிஸ்தான் உலக கோப்பை மோதல் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools