X

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடு!

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து, ஊரக உள்ளாட்சிகளில் உள்ள 91 ஆயிரத்து 975 பதவி இடங்களை நிரப்புவதற்கு வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 9-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 2 லட்சத்து 98 ஆயிரத்து 335 மனுக்கள் தாக்கல் ஆகின.

இதில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு 2 லட்சத்து 6 ஆயிரத்து 657 மனுக்களும், கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கு 54 ஆயிரத்து 747 மனுக்களும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 32 ஆயிரத்து 939 மனுக்களும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 3 ஆயிரத்து 992 மனுக்களும் பெறப்பட்டன.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்றுமுன்தினம் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் நடைபெற்றது. இதில், மாநில தேர்தல் ஆணையத்தின் விதிகள் மற்றும் நடைமுறைகளை முறையாக பின்பற்றாத மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

மொத்தம் எத்தனை மனுக்கள் தள்ளுபடியானது என்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்தநிலையில் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு, தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் தங்களுடைய மனுக்களை திரும்ப பெறுவதற்கு 2 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டது.

இன்று மதியம் 3 மணியுடன் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் முடிகிறது. இதையடுத்து ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யும் பணி நடைபெறும்.

ஒரே சின்னத்தை பலர் கேட்டிருந்தால் குலுக்கல் முறையில் சின்னம் தேர்வு செய்யும் பணியும் மேற்கொள்ளப்படும்.

வழக்கமாக தேர்தல்களில் வேட்புமனுக்கள் திரும்ப பெறுவதற்கான நடைமுறைகள் முடிந்தவுடன் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் ஒட்டுமொத்தமாக வெளியாகும். தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் என அதிகம் பேர் களத்தில் குதித்துள்ளதால், இன்று(வியாழக்கிழமை) வேட்பாளர்கள் இறுதி பட்டியல் மொத்தமாக வெளியாகுவதில் கால தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணைய வட்டாரத்தில் விசாரித்த போது, வேட்புமனுக்கள் பரிசீலனை முடிந்தவுடன் அந்தந்த மாவட்டங்களில் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு உள்ளது. ஆனால் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஒட்டுமொத்தமாக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்படும்.

ஒட்டுமொத்த இறுதி பட்டியல் 20-ந்தேதி வெளியாக வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

Tags: south news