எதிர்க்கட்சிகளின் குற்றம் ஆதாரமற்றவை – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

அண்மை காலமாக நாட்டில் வெறுப்பு கருத்துகள் குறித்த பிரதமரின் அமைதி அதிர்ச்சி அளிக்கிறது என்றும், வெறுப்பு கருத்துகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கவலை
அளிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய
மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட 13 எதிர்க்கட்சித் தலைவர்கள் வெளியியிட்டுள்ள கூட்டறிக்கையில், வகுப்புவாத வன்முறையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை
வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்று மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,
எதிர்க்கட்சிகள் நாட்டில் வெறுப்பு விதையை விதைத்து வருகின்றன, அதை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.

கேரளாவில் ஆர்எஸ்எஸ் தொண்டர் மரணம் குறித்து பேசிய அவர், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களால் அமைதியான முறையில் ஆட்சியை நடத்த முடியவில்லை என்றார்.
அந்த மாநிலங்களில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மோசமாக உள்ளதாகவும், குற்றச் செயல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கத்தில் வன்முறை நடந்தபோது எதிர்க்கட்சித் தலைவர்கள் எங்கே இருந்தார்கள்? என்று கேள்வி எழுப்பி உள்ள அனுராக் தாக்கூர், கடந்த ஆண்டில்,
ராஜஸ்தானில் இதுபோன்ற 60க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன என்றார்.

ஆனால், கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க அம்மாநில காங்கிரஸ் அரசு தவறியதை சோனியா காந்தி கவனிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools