என் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யாதீர்கள் – ரசிகர்களுக்கு நடிகர் விஜய் உத்தரவு

நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு படம் பொங்கலன்று வெளியாக இருக்கும் நிலையில் விஜய் ரசிகர்களை நேற்று சந்தித்து பேசியிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சந்திப்புக்கு நேரம் கேட்டு பல வருடங்களாக ரசிகர்கள் காத்திருந்தனர். 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சந்திப்பு நடந்திருப்பது ரசிகர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காலை முதலே விஜய்யின் நீலாங்கரை வீட்டின் முன்பாக ரசிகர்கள் குவியத் தொடங்கினார்கள். மதியம் 2 மணிக்கு ரசிகர்களை சந்திக்க விஜய் திட்டமிட்டிருந்தார். பனையூர் அலுவலகத்திற்கு ரசிகர்கள் கூட்டம் வரத்தொடங்கியிருந்தது. குறிப்பாக சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, ஈரோடு மாவட்ட ரசிகர்களை மட்டுமே சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் செய்தி பரவி பல்வேறு பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் குவிந்து விட்டனர். இதனால் கூட்டம் கட்டு கடங்காமல் போனது.

மக்கள் இயக்கத்தின் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வந்திருந்த அனைவருக்கும் பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. பிரியாணியின் சுவை பற்றி ஒரு ரசிகர் இணையத்தில் பதிவிட்டு பாராட்டு தெரிவிக்க, அதைத் தொடர்ந்து இணையத்தில் பனையூர் பிரியாணி என்ற ஹேஷ்டேக்குகள் பரவ ஆரம்பித்தது.

முதலில் மாவட்ட அளவிலான பொறுப்பாளர்களை சந்தித்துப் பேசிய விஜய் அவர்களிடம் மக்கள் இயக்கத்தின் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார். எதிர்வரும் நாட்களிலும், வாரிசு திரைப்படம் வெளியாகும் போது என்னமாதிரியான நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும். ரசிகர்கள் சம்பாதிக்கக்கூடிய பணத்தில் ஒரு பங்கை மட்டுமே செலவிடுங்கள், தேவையில்லாமல் செலவு செய்ய வேண்டாம், நற்பணிகளை மேற்கொள்ளும் போது ஏழை எளிய மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்க வேண்டும், ஏழை எளிய குடும்பங்களுக்கு தொடர்ந்து உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதன் பின்னர் பேசிய விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தமிழகத்தில் 15 மற்றும் 16 இடங்களில் தான் விஜய் மக்கள் இயக்கம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரத்தம் கொடை கொடுக்கக் கூடிய இயக்கம் மக்கள் இயக்கம் தான் என்று அவர்களுக்கு விளக்கப்பட்டிருக்கிறது.

பிற்பகலில் ரசிகர்களை சந்தித்த விஜய் அவர்களிடம், முதலில் உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள். அதுதான் முக்கியம். அதன் பிறகு இயக்க பணிகளில் கவனம் செலுத்துங்கள். குறிப்பாக என்னுடைய கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்யக்கூடாது. அதற்கு பதிலாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும் ஏழைகளுக்கு பால், முட்டை சத்தான உணவு கொடுத்து அவர்களுக்கு உதவுங்கள். மக்கள் நலப்பணிகளை தொய்வில்லாமல் தொடர்ந்து செய்து வர வேண்டும் என்பதை விளக்கியிருக்கிறார் விஜய்.

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். அடுத்த நாட்களில் பிற மாவட்ட ரசிகர்களையும் சந்திக்க விஜய் திட்டமிட்டிருக்கிறார். இதனால் வரும் நாட்களில் விஜய் ரசிகர்களின் பயணம் சென்னையை நோக்கியே அமைந்திருக்கும் என்கிறார்கள். இந்த விழாவின் முடிவில் பொதுசெயலாலர் புஸ்ஸி ஆனந்த் பேசும்போது, மக்கள் நலப்பணிகளில் ஈடுபடாமல் வெறுமனே விஜய்யை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்பவர்களுக்கு மக்கள் இயக்கத்தில் இடமில்லை. மக்கள் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று பேசியது குறிப்பிடத்தக்கது. இந்த அதிரடி நடவடிக்கை விஜய் மக்கள் இயக்கத்தை திரையுலகிலிருந்து அடுத்த கட்டமாக அரசியலை நோக்கி நகர்த்தும் என்கிறார்கள்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools