எல்லை தாண்டி மேகாலாய கிராமத்திற்குள் நுழைந்த வங்காளதேச ராணுவ வீரர்களை விரட்டியடித்த கிராம மக்கள்

வங்காளதேசத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த 2 வீரர்கள் நேற்று முன்தினம் எல்லை தாண்டி வந்து மேகாலயா மாநிலம் தெற்கு காரோ ஹில்ஸ் பகுதியில் உள்ள கிராமத்திற்குள் நுழைந்தனர்.

இந்தியா- வங்காளதேச சர்வதேச எல்லை வேலியை ஒட்டி அந்த கிராமம் அமைந்துள்ளது. அந்த வீரர்கள் துப்பாக்கி மற்றும் லத்திகள் வைத்திருந்ததால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், அவர்களிடம் சென்று விசாரித்து அவர்களை திரும்பி செல்லும்படி கூறி உள்ளனர். அவர்கள் தயங்கியதைடுத்து கிராம மக்கள் ஒன்றுசேர்ந்து வீரர்களை விரட்டியடித்தனர். இதனால் வீரர்கள் வந்த பாதையில் திரும்பிச் சென்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வங்காளதேச எல்லை பாதுகாப்பு படையிடம் (பிஜிபி), எடுத்துரைத்து, எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. எல்லைப்பகுதியில் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக துரத்தியபோது இந்திய கிராமத்திற்குள் தெரியாமல் நுழைந்ததாக வங்காளதேசம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய எல்லைப் பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த கிராமம் எல்லை வேலிக்கு முன்னால் இருப்பதால், வங்காளதேச வீரர்கள் குற்றவாளிகளை துரத்தும்போது தாங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்ததை உணரவில்லை. எல்லை விதிகளை மீறியது தொடர்பாக கொடி அணிவகுப்பு கூட்டம் நடத்தப்பட்டு அதிகாரப்பூர்வ நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் இந்த சம்பவத்தில் இந்தியர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கப்படவில்லை” என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools