ஐபிஎல் கிரிக்கெட் 2023 – ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விராட் கோலி மற்றும் ஃபாப் டு பிளெசிஸ் அதிரடியாக ஆடினர். விராட் கோலி 18 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், ஃபாப் டு பிளெசிஸ் 44 பந்துகளில் 55 ரன்களை குவித்தார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கிலென் மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்சர்களை விளாசி 54 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்களை இழந்து 171 ரன்களை எடுத்தது. ராஜஸ்தான் அணி சார்பில் ஆடம் சாம்பா, கேஎம் ஆசிஃப் தலா இரண்டு விக்கெட்களையும், சந்தீப் சர்மா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் டக் அவுட் ஆகினர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 10 ரன்களுக்கு நடையை கட்டிய நிலையில், தேவ்தட் படிக்கல் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பின் களமிறங்கிய ஹெட்மயர் 19 பந்துகளில் 35 ரன்களை எடுத்து அவுட் ஆனார். பின் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க ராஜஸ்தான் அணி 59 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பெங்களூரு சார்பில் சிறப்பாக பந்துவீசிய பர்னெல் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

மைக்கல் பிரேஸ்வெல், கான் ஷர்மா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். கிளென் மேக்ஸ்வெல் மற்றும் முகமது சிராஜ் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இதன் மூலம் பெங்களூரு அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools