ஐ.பி.எல் கிரிக்கெட் – லக்னோ அணியை வீழ்த்தி பெங்களூர் வெற்றி

ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டம் மும்பையின் டி ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்றது.. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, பெங்களூரு அணி முதலில் களமிறங்கி பேட் செய்தது. லக்னோ அணியினரின் துல்லியமான பந்து வீச்சால் பெங்களூரு அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

அனுஜ் ராவத் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். விராட் கோலி டக் அவுட்டானார். மேக்ஸ்வெல் 23 ரன்னிலும், பிரபு தேசாய் 10 ரன்னிலும் வெளியேறினர்.

கேப்டன் டூ பிளசிஸ் தனி ஆளாக போராடினார். முதலில் நிதானமாக ஆடிய அவர் பின்னர் அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். அவருக்கு ஷாபாஸ் அகமது ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 26 ரன்னில் அவுட்டானார். 4 ரன்னில் சதத்தை தவறவிட்ட டூ பிளசிஸ் 96 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது.

அந்த அணியின் தொடக்க வீரர் டி காக் 3 ரன்னுடன் வெளியேறினார். கேப்டன் ராகுல் 30 ரன்கள் அடித்தார். மனிஷ் பாண்டே 6 ரன்னுக்கும், தீபக் கூடா 13 ரன் எடுத்த நிலையிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். குருனால் பாண்டியா 28 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார். ஆயுஷ் படோனி 13 ரன்னுக்கும், ஸ்டோனிஸ் 24 ரன்னும் அடித்தனர்.

20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools