ஒரு கிலோ இறைச்சிக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்!

தற்போது உள்ள கால கட்டங்களில் இறைச்சியின் விலையும் பெட்ரோல் விலையும் உச்சத்திற்கு சென்று விட்டது. இந்த நிலையில் அசைவப் பிரியர்கள் இறைச்சி வாங்க முடியாமல் பெட்ரோலும் வாங்க முடியாத ஒரு சூழல் உருவாகி வருகிறது. பொதுவாக ஆடி மாதம் வந்தாலே தள்ளுபடி விலைக்கு நிறுவனங்கள் பொருட்களை விற்பனை செய்வார்கள்.

இதனை மிஞ்சும் வகையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தனியார் இறைச்சிக்கடையில் ஆடி மாத சலுகை விற்பனை நடந்து வருகிறது.

திருமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரன். இவர் அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இங்கு ஆடு, நாட்டு கோழி, வாத்து, முயல்,வான்கோழி, காடை, கருப்புக் கோழி, கின்னிக் கோழி என பல ரகங்களில் இறைச்சிகள் கிடைக்கிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறைச்சிக் கடை தொடங்கியது முதல் ஒவ்வொரு முறையும் விற்பனையை விரிவுபடுத்தும் நோக்கில் 1 கிலோ இறைச்சிக்கு 6 முட்டை இலவசம், 12 முட்டை இலவசம் என பல்வேறு அதிரடி சலுகைகளை வழங்கி வந்தார்.

இந்நிலையில் அதற்கு ஒரு படி மேலாக தற்போது ஆடி மாதம் என்பதால் ஜவுளிக்கடை, வீட்டு உபயோக பொருள் விற்பனை கடைகளில் மிஞ்சும் வகையில் ஒரு கிலோ இறைச்சி வாங்குபவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என அதிரடியாக அறிவித்து போஸ்டர் ஒட்டி திருமங்கலம் மக்களை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

தற்போது உள்ள சூழ்நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 103 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.  இறைச்சி வாங்க வெகுதூரத்திலிருந்து  இந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கறியுடன் பெட்ரோலை இலவசமாக வாங்கி செல்கிறார்கள்.

இது குறித்து சந்திரன் கூறுகையில், “எனது தந்தை காலத்தில் திருமங்கலத்தில் எங்கள் குடும்பம் மட்டும் தான் வான்கோழி வளர்த்து விற்பனை செய்து வந்தார்கள். தற்போது மக்களுக்கு நல்ல சத்தான இறைச்சிகளை வழங்க வேண்டும் என்பதற்காக உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இறைச்சிகளை விற்பனை செய்கிறோம்” என  தெரிவித்தார்.

ஆடி மாதம் அதிரடி ஆபராக ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்கி வருகிறேன். ஆடி மாதம் முழுவதும் இந்த ஆஃபர் இருக்கும் என்றார். அதிரடி சலுகையில் சந்திரனின் கடைக்கு பொதுமக்கள் படையெடுக்கின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools