ஒரு நாளைக்கு 4500 பேர் மெட்ராஸ் ஐ நோயால் பாதிப்பு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோய் பரவல் அதிகரித்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை கண் நோய்க்கான மருத்துவ மையங்கள் அரசின் சார்பில் 10 இடங்களில் இருக்கிறது. எழும்பூர் கண்நோய் மருத்துவமனையை போன்று ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை என 10 இடங்களில் கண் மருத்துவம் பார்க்கும் மையங்கள் இருக்கிறது.

இதில் எழும்பூரில் இருக்கிற மண்டல கண் மருத்துவயியல் நிலையம் என்பது கண் மருத்துவத்தில் மிக சிறப்பான பங்களிப்பை செய்து வருகிறது. சென்னையில் 10 இடங்களிலும் நாள்தோறும் சராசரியாக 80 முதல் 100 பேர் வரை இந்த நோயினால் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் தினமும் 4000 முதல் 4500 பேர் வரை மெட்ராஸ் ஐ பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். சென்னையில் 10 கண் நோய் மருத்துவ மையங்கள் இருப்பதை போலவே தமிழ்நாடு முழுவதிலும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகள், சில வட்டார அரசு மருத்துவமனைகள் என 90 இடங்களில் அரசு கண் மருத்துவ மையங்கள் இயங்கி வருகிறது.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 1.50 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த 1.50 லட்சம் பேரில் யாருக்கும் பார்வை இழப்பு என்ற பாதிப்பு இல்லை. இந்த பாதிப்பு கண்ணின் முன் பகுதியான வெள்ளைப்படலத்தில் வைரஸ் கிருமியினால் ஏற்படும் ஒரு கண்நோய் ஆகும். இந்த வைரஸ் என்பது மண்டல கண் மருத்துவவியல் நிலையத்தின் சார்பில் அதன் மாதிரிகளை எடுத்து கிண்டியில் உள்ள பி.சி.ஆர். ஆய்வகத்தில் பரிசோதனைக்கு பிறகு அடினோ மற்றும் என்ரோ என்று சொல்லக்கூடிய வைரஸ் தாக்குதலினால் மெட்ராஸ் ஐ வருகிறது என்று கண்டறியப்பட்டு இருக்கிறது.

இந்த நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு இது எப்படி உறுதி செய்யப்படுகிறது என்றால் கண்ணில் உறுத்தல் இருக்கும். சிவந்த நிறமாக மாறும். அதிக கண்ணீர் சுரக்கும். அரிப்பு ஏற்படும். கண் வீங்கும். கண்ணில் அடிக்கடி அழுக்கு சேரும். கண் இமைகள் ஒட்டிக்கொள்ளும். இவைதான் மெட்ராஸ் ஐ அறிகுறிகள் ஆகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்களை கைகளினால் தொடுவது கூடாது. கண்களை தொட்டு விட்டு அக்கம் பக்கம் இருப்பவர்களை தொட்டால் அவர்களுக்கும் அந்த பாதிப்பை ஏற்படுத்தும். இது எளிதில் பரவக்கூடிய ஒரு தொற்று நோய் ஆகும். எனவே குடும்பத்தில் உள்ளவர்களில் யாருக்காவது ஒருவருக்கு இந்த கண்நோய் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் முடிந்தவரை தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது. 3 முதல் 4 நாட்கள் அலுவலகங்களுக்கு செல்வதையோ, பள்ளிகளுக்கு செல்வதையோ, வணிக வளாகங்களுக்கு செல்வதையோ, மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதையோ தவிர்த்துக் கொள்வது நல்லது.

இது விரைவாக பரவும் தன்மையுடையது என்பதால் மற்றவர்களுக்கும் இந்நோய் பாதிப்பு உடனடியாக வரும். எனவே இந்த நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் கண் சொட்டு மருந்தை தாங்களாகவே கடையில் வாங்கி போட்டுக்கொள்ளக்கூடாது. சுய சிகிச்சை செய்து கொள்ளக்கூடாது. முறையாக கண் மருத்துவரை அணுகி அவரது பரிந்துரையினை பெற்று சிகிச்சை பெற வேண்டும். கண்நோய்க்கு போடப்படும் மருந்தின் தன்மை, வீரியம் போன்றவைகள் ஒவ்வொரு மருந்துக்கும், நோயின் பாதிப்பு தன்மைக்கு ஏற்பவும் மாறுபடும். எனவே கடையில் போய் ஏதாவது ஒரு மருந்தை வாங்கி போட்டுக் கொள்வதன் மூலம் தங்களுடைய கருவிழிகள் பாதிப்புக்கு உள்ளாகும். பார்வை இழப்பும் ஏற்படும். எனவே மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை போட்டுக் கொள்ளக்கூடாது. வீட்டில் ஒருவருக்கு கண்நோய் ஏற்பட்டால் அவர்களுக்காக வாங்கும் சொட்டு மருந்து பாட்டிலை வேறு ஒருவருக்கு பயன்படுத்தக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools