X

ஓட்டுக்கு பணம் பெறுவதை தடுக்க போஸ்டர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளைஞர்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ளது. நாளையுடன் பிரசாரம் நிறைவடைவதால் வேட்பாளர்கள் அனைவரும் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்தநிலையில் சில வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் கொடுத்து ஓட்டுக்களை பெற்று விடலாம் என்ற மன நிலையில் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. அதனை தடுக்கும் விதமாக சமூக ஆர்வலர்கள் ஓட்டுக்கு பணம் கொடுப்பதோ, பணம் வாங்குவதோ குற்றம் என்று பிரசாரங்கள் செய்து வருகின்றனர். இதுபற்றி இளைஞர்களும், மாணவர்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் மறமடக்கி கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராம வளர்ச்சிக்காகவும், நீர் நிலைகளை சீரமைப்பதற்காகவும் உருவாக்கப்பட்ட மக்கள் செயல் இயக்கம் இளைஞர் அமைப்பினர் ‘நமது ஓட்டு விற்பனைக்கு அல்ல’ என்று அச்சிட்ட பதாகைகளை பொது இடங்களில் வைத்துள்ளனர்.

மேலும் அந்த இயக்கத்தில் உள்ள உறுப்பினர்கள் தங்கள் வீட்டு சுவர்களில் எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல என்று சுவரொட்டியும் ஒட்டி வைத்து உள்ளனர்.

இதுகுறித்து மறமடக்கி மக்கள் செயல் இயக்க இளைஞர் அமைப்பினர் கூறுகையில், நமது ஒவ்வொரு ஓட்டும் விலை மதிப்பற்றது. அதனை மக்களிடம் ஏமாற்றி ரூ.100-க்கும், ரூ.500-க்கும் வாங்கிசென்று விடுகிறார்கள். அதன்பிறகு இந்த மக்களின் குடி தண்ணீர் தேவைகளை கூட பூர்த்தி செய்ய வருவதில்லை. பணம் கொடுத்து வெற்றி பெற்றவர்களிடம் போய் கேட்டால், பணம் வாங்கி விட்டுத்தானே ஓட்டு போட்டாய் என்று கேட்கிறார்கள்.

இதனால்தான் பணம் வாங்கி கொண்டு ஓட்டு போட்டு, தங்கள் உரிமையை இழக்க வேண்டாம் என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த, பொது இடங்களிலும் வீட்டு சுவர்களிலும் விழிப்புணர்வு சுவரொட்டி ஒட்டி இருக்கிறோம். இது மட்டுமின்றி மக்கள் செயல் இயக்கம் சார்பில் ஒரு மது பாட்டிலுக்கு மயங்கி ஓட்டு போடாதே! குடிக்க தண்ணீர் கொடுப்பவருக்கு ஓட்டு போடு..! என்று வீடியோ விழிப்புணர்வு பிரசாரமும் சமூக வலைத்தளங்கள் மூலம் செய்து வருகிறோம் என்றனர்.

Tags: south news