ஓய்வு முடிவை ஒத்தி வைத்த டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ்

இந்திய மூத்த டென்னிஸ் வீரர் 46 வயதான லியாண்டர் பெயஸ் இந்த ஆண்டுடன் சர்வதேச டென்னிசில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்து இருந்தார். ஆனால் கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டு நடக்க இருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டு விட்டது. விம்பிள்டன் போட்டி ரத்தானது. இதனால் ஓய்வு திட்டத்தை ஓராண்டுக்கு தள்ளிவைக்கலாமா? என்ற யோசனையில் இருக்கிறார். லியாண்டர் பெயஸ் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது. இப்போதைக்கு ஜூலை, ஆகஸ்டு மாதத்துக்குள் மீண்டும் டென்னிஸ் போட்டி தொடங்குமா என்பது சந்தேகம் தான். அக்டோபர் அல்லது நவம்பர் ஆகலாம் என்று நினைக்கிறேன். ஆனால் மறுபடியும் டென்னிஸ் போட்டி தொடங்கும் போது அதில் விளையாடுவதற்கு என்னை சிறப்பாக தயார்படுத்தி உள்ளேன். 2020-ம் ஆண்டு சீசன் நிறைவடைந்ததும், 2021-ம் ஆண்டில் தொடர்ந்து விளையாடுவதா? இல்லையா? என்பதை முடிவு செய்வேன். இதுவரை 97 கிராண்ட்ஸ்லாம் போட்டித் தொடர்களில் விளையாடி உள்ளேன். மேலும் 3 போட்டிகளில் விளையாடினால் 100 கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் பங்கேற்ற இலக்கை எட்டி விடுவேன். இதே போல் டோக்கியோ ஒலிம்பிக்கில் களம் இறங்கினால், ஒலிம்பிக்கில் அதிகமுறை (8-வது முறை) பங்கேற்ற இந்தியர் என்ற சிறப்பை பெறுவேன். இதை இரண்டையும் செய்ய விரும்புகிறேன். ஒருவேளை அதை எட்ட முடியாமல் போனாலும் கூட, டென்னிசில் இதுவரை நான் செய்துள்ள சாதனைகளே எனக்கு மகிழ்ச்சி தான்.

இவ்வாறு பெயஸ் கூறினார்.

1993-ம் ஆண்டு முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாடி வரும் லியாண்டர் பெயஸ், ஆண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் மொத்தம் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news